தடுப்பு காவல் கைதிகள்-காணாமல் போனவர்கள் தொடர்பில் கொழும்பில் அடுத்தவாரம் மாநாடு

செப்டம்பர்11, 2009 at 4:25 மாலை | In TAMIL | Leave a Comment

மனோ கணேசன் எம்பி தகவல்  
(லங்கா ஈ நியூஸ் 09.09.2009 -பி.ப.2.50)

போர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது. இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளனர்.

இது தொடபில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது.

அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது. இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்துவிட முடியாது.

வெளியிலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் நோக்கில் தடுப்புகாவல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை அல்லது புனருத்தாபனம் ஆகிய அடிப்படைகளில் சுதந்திரம் வழங்கப்படவேண்டும். அதேபோல் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் கலைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் தொடர்பிலே பொறுப்பான பதில்கள் சம்பந்தப்பட்டவர்களது குடும்பங்களுக்கு தரப்படவேண்டும்.

கொழும்பு மகசின் மற்றும் சீஆர்பி, களுத்துறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய சிறைக்கூடங்களிலும், பூசா தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டிருப்பவர்களின் முழுமையான விபரங்களும், பிரச்சினைகளும் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

இக்காரணங்களுக்காக தடுப்புகாவல் கைதிகள் மற்றும் காணாமல்போனவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்திலே கொழும்பில் மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவேண்டும். இம்மாநாடு நடைபெறும் இடம் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஊடகங்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

No Comments Yet »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.