நிமிடம் தோறும் புதிய செய்திகள்


இங்கே அழுத்துக CLICK TO CZRRENT NEWS

இங்கே அழுத்துக CLICK TO CURRENT NEWS

ஊடகர்களின் சமூகப் பொறுப்பு


சண் தவராஜா

சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் இன்றைய மனித வாழ்வியலில் இன்றியமையாதவையாக விளங்கி வருகின்றன. பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு விதமான வடிவங்களில் மனித வாழ்வியலில் பங்கேற்று வந்த இந்த ஊடகங்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத் தளங்கள் என பரிணாமம் கண்டுள்ளன. முறையான ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் முகநூல், ‘வட்ஸ் அப், டுவிட்டர், யூ டியூப்” போன்றவை வரையறைகளை உடைத்து உண்மைகளை, தணிக்கைகள் எதுவுமின்றி உடனடியாகவே உலகின் கண்கள் முன் நிறுத்தி வருகின்றன.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஊடகங்கள் தொடர்பிலான பரிச்சயம் படித்தவர்களுக்கானதாக மாத்திரமே நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னான அரசியல் சூழல் காரணமாக பாமரர்களும் ஊடகங்களை நாடி செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவர்களாக மாற வேண்டிய நிலை உருவானது. 80 களில் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியம். அதன் விளைவான யுத்த சூழல் என்பவை காரணமாக ஊடகங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் உயிருக்கு நிகரானவையாக மாறிப் போயிருந்தன. ஒரு காலகட்டத்தில்; மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை ஊடகங்களின் வழிகாட்டல்களைக் கொண்டே தீர்மானிப்பவர்களாக இருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் ஊடகங்கள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த அதீத ஆர்வம் வெகுவாகக் குறைந்து போயுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அது மட்டுமன்றி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பும் எல்லை கடந்து சென்றிருக்கின்றது. யுத்தச் செய்திகளை மாத்திரமே நம்பி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பல ஊடகங்கள் ஜனநாயகச் சூழலில் செய்திகளுக்காக அல்லாடிக் கொண்டிருப்பதையும் சில வேளைகளில் செய்திப் பஞ்சம் காரணமாக தரக் குறைவான செய்திகளை அளிக்கை செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.

யுத்த காலகட்டத்தில் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஊடகவியலாளர்களின் கவர்ச்சியால் உந்தப்பட்டு செய்தியாளர்களாக உருவான பல இளம் ஊடகவியலாளர்கள் தற்போதைய சூழலில் செய்திகளுக்காக அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது. பணம் பண்ணும் நோக்கில் பலர் அரச சார்பற்ற நிறுவனங்களில் வாக்குறுதிகளில் மயங்கி தம்மை மறந்து செயற்பட்டு வருவதையும் காண முடிகின்றது.

அண்மையில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலர் கொழும்பு வந்து அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்திதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தமையை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். புதிய ஆட்சியில் பிராந்திய செய்தியாளர்கள் அரசுத் தலைவரைச் சந்தித்து நிழற்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு ஊடக சுதந்திரம் உள்ளதாக வெளியே தெரியப் படுத்தப்பட இது உதவியதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், இது தொடர்பில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் மேற்கொண்டிருந்த பதிவு பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவருடைய பதிவு கீழே உள்ளது. இதனை வாசிக்கும் போது அவரின் ஆதங்கம் உங்களுக்கு நிச்சயம் புரியும் என நினைக்கிறேன்.

வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள், என்பதாக திடீரென வடக்கில் இருந்து தமிழ் ஊடக நண்பர்கள் (படத்தில் பார்த்தால் நிறைய பேர்) கொழும்பு வந்து போனதாக ஒருநாள் செய்திகளில் கண்டேன். அதற்கு முதல்நாள் முற்பகல் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பில், சில மணி நேர இடைவெளியில், அன்று மாலையே இலங்கை மன்ற கல்லூரியில், வடமாகாண ஊடகவிலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கின்றது, வாருங்கள் என்று சொல்லப்பட்டது.
அன்று மாலை, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இருந்ததால், என்னால் அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

அவ்வளவுதான். இது ஏதோ ஒருநாளுக்குள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பயணமோ? அப்படியானால் அது ஏன்? ஏனப்பா இந்த அரைகுறை அவசர விஜயம்?
இதற்கு முன் இங்கே இருந்து ஒரு ஊடக குழுவினர் அங்கே வந்தார்கள். என்னையும் யாழ் வரும்படி ஒரு ஏற்பாட்டாளர் அழைத்தார். வேறு வேலை இருந்ததால் நான் வரவில்லை. ஆனால்இ என்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கினேன்.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், ஊடக அமைச்சர் ஆகியோரை சந்தித்தது மிக நல்ல விடயம். ஆனால், இவை மாத்திரம் போதும் என்று நினைத்து விட்டீர்களோ? தலைநகர மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஒரு அமைச்சரவை அமைச்சர், அதுவும் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாணசபை உறுப்பினர்கள் இருவர், மாநகரசபை உறுப்பினர்கள் ஆறு பேர் என்போரை கொண்ட நமது கட்சி இங்கே இருக்கிறது. கட்சி அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், எங்களது தொலைபேசி இலக்கங்கள், முகநூல் உள்பெட்டிகள், நிலையான விலாசங்கள், என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஊடகவியாளர்களுக்கு இவை தெரியாமல் இருக்கவும் முடியாது.

தலைநகரம் வந்த உங்களை உடன்பிறப்புகளாக மகிழ்வுடன், அழைத்து, விருந்தோம்பல் செய்து, அனுப்பி வைக்க எம்மால் முடியாது என எண்ணி விட்டீர்களோ? முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால், எத்தனையோ அரசியல், சமூக, கலாச்சார, ஊடக தலைப்புகளில் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டு கலந்து உரையாடி, இருக்கலாமே? பல சிக்கல்களுக்கு விடை தேடியும் இருக்கலாமே?

அன்று கடந்த ஆட்சியில் அங்கே நீங்கள் கொல்லப்பட்ட போது, தாக்கப்பட்ட போது, கடத்தப்பட்ட போது, இங்கே இருந்து, அங்கே வந்து, என்னுடன் இணைந்து போராடி, வடக்கு ஊடக அடக்குமுறைபற்றி கொழும்பில் ஆர்ப்பரித்து பேசிய, சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகிய சிங்கள முற்போக்காளர்களையாவது சந்தித்தீர்களா என்றால் அதுவும் இல்லை. சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகியோரிடம் விசாரித்த போது, இல்லையே, அப்படியா வந்தார்களா? எப்போ? ஏன் எங்களை இவர்கள் சந்திக்கவில்லை என்று இருவரும் என்னிடம் வருத்தப்பட்டார்கள்.
ஆக, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை குசலம் விசாரிக்க வந்தீர்களோ? அதற்கு மொழிபெயர்ப்பாவது கிடைத்ததா? அல்லது அவர்களுடன் ‘போடோ சூட்’ செய்து படம்பிடிக்கதான் கொழும்பு வந்தீர்களோ? பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்.

ஒரு சில ஊடகர்கள் இவ்வாறு நடந்து கொண்டாலும், சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளர்கள் எம் மத்தியில் அறவே இல்லை எனக் கூறிவிட முடியாது. ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு தளங்களில் செயற்பட்டு வரும் அத்தகையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முனைப்புக் காட்டி வரவே செய்கின்றனர். அவர்கள் ‘வட்ஸ் அப்” மற்றும் ‘வைபர்” குழுக்களை உருவாக்கித் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சில இலகுவான விடயங்களில் உடனடித் தீர்வுகளை எட்டும் அவர்கள் பல விடயங்களில் விவாதங்களை உருவாக்குவதன் ஊடாக விழிப்புணர்வை உருவாக்கி தீர்வுகளை எட்ட முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சி பாராட்டப்பட்டே ஆக வேண்டும்.
அது மாத்திரமன்றி, பொதுவில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் தொடர்பில் பரவலான விழிப்புணர்வை உருவாக்கவும், ஜனநாயகத்தின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கவும் அவர்கள் முயன்று வருகின்றார்கள். அத்தோடு, மக்கள் பிரதிநிதிகள் தம்மைத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாகவும், அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பவர்களாகவும் விளங்கும் வகையில் ஒரு இணைப்புப் பாலமாகச் செயற்படவும் ஊடகர்கள் முயன்று வருகின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தற்காலச் சூழலில் முறையான வழிகாட்டல் இன்றி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சரியான வழிகாட்டல் ஒன்று உருவாகும் வரை அதனை வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகர்களின் தோள்களிலேயே இருக்கிறது. தமது பொறுப்பை உணர்ந்து அவர்கள் சரியாக நடந்து கொண்டால் மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் எனலாம்.

ஜி. நடேசன் நினைவு ம் இன்றைய யதார்த்தமும்


சண் தவராஜா

ஈழத் தமிழ் மக்களின் நலவாழ்வை வெகுவாக விரும்பிய ஊடகவியலாளர் ஜி. நடேசன் எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன. பிரிவுத் துயரால் துவண்டுபோன அவரது குடும்பத்தினரதும் அவரை மானசீகமாக நேசித்த அவரது நண்பர்களினதும் துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. நடேசன் அவர்களின் படுகொலையோடு ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போதுதான் – 12 வருடங்களின் பின்னர் – ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக முதன்முறையாக அவருக்கான அஞ்சலி நிகழ்வொன்று அவர் பெரிதும் நேசித்த மட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. Continue reading

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம்


சிவராம் ஞாபகார்த்த மன்றம்

தாய்த் தமிழகத்தின் சென்னை மற்றும் கட
லூர்  மாவட்டங்களிலும்,  தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ள தீவிர பருவமழைத் தாக்கம் புலம்பெயர் தமிழ் மக்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் சீற்றம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பழிவாங்குகின்றதோ என நினைக்கத் தோன்றும் வகையில் நிலைமைகள் உள்ளன. Continue reading

தேவையில்லாத தேர்தலும்! நெளிவுகளின் தெளிவும்!


வின்சென்ற் ஜெயன்

பருவமழை பொழியுதோ இல்லையோ? இலங்கையில் தேர்தல் நிச்சயம்.

காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படும் ஜனநாயக முறையிலான தேர்தல் மக்களுக்காகவா? அல்லது அரசியல் வாதிகளுக்காகவா? இலங்கையில் ஜனநாயகம் என்பது இருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும் அவசியம் ஏற்படாது? தற்போது நிகழவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ராஜபக்சக்களுக்கு மீண்டும் நாட்டில் நன்மதிப்பளிப்பதற்காகவே என்பது உண்மையான உண்மை. அடிக்கடி நிகழ்த்தப்படும் தேர்தல்களினால் நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்லும், தேர்தல்களை முன்னிட்டு பல செயற்திட்டங்களும், மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வளங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் அல்லது தேர்லுக்காக பயன்படுத்தப்படும் என்பதை யாவரும் அறிந்ததே. அதனால் சாதாரன ஒரு மனிதனின் வாழ்வு பலவருடங்களை பின்நோக்கி நகர்கின்றதை அனுபவித்து நிற்பவர்களே இலங்கை மக்கள். இப்படியான அவசியமில்லாத தேர்தல்; நடைபெறுவதையோ அல்லது குறித்த காலத்திற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படுவதையோ மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் அதற்காக குரல் எழுப்பவேண்டும். (மேலும்)

நல்லாட்சி,பத்தோடு பதினொன்று…


வின்சென்ற் ஜெயன்

அன்ரூ சான், மயூரன் சுகுகுமார் மற்றும் சகாக்களின் மரணதண்டணை சம்பவம் எந்தளவிற்கு உலகத்தின் கவணத்தை ஈர்த்ததோ அதே வலுவில் வித்தியாவின் சம்பவமும் முக்கிய கவணத்தை பொற்றுவிட்டது. (மேலும்)

மரணங்களின் அஸ்தமனம்!


1971 மற்றும் 1989 ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை கணக்கில் எடுக்காது, இலங்கையில் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த அரசு – புலிகள் யுத்தத்தினை மாத்திரம் நோக்குவோமானால், எல்லா இனங்களையும் சேர்ந்த ஏறத்தாள ஒரு இலட்சம் வரையிலான மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல இலட்சக் கணக்கானவர்களின் இடப்பெயர்வுகளும், மதிப்பிட முடியாத சொத்துக்களின் அழிவும் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலங்கை அரச படைகளும், அரச படைகளை எதிர்த்துப்போராடிய ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும், இந்திய அமைதிப்படையுமே பொறுப்பாளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரச படைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றைக்கும் பொறுப்புக்கூற இலங்கை அரசு உள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்களினதும் இந்திய அமைதிப்படையினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற இன்று எவருமே இல்லை.

யுத்த முனையில் பலியானவர்கள் மற்றும் யுத்தத்தின் நடுவில் சிக்கி கொல்லப்பட்ட பல்லின பொதுமக்கள் தவிர ‘என்னுடன் உடன்பாடு இல்லாதவன் எனது எதிரியே’ என்ற கோட்பாட்டில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துத் தமிழ் தரப்பினராலும் ‘மரண தண்டனை’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் மூன்று தசாப்த காலமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது தமது தேவை கருதி உரிமைகள் கோரப்பட்டும் இருக்கின்றன. அதேவேளை உரிமை கோரப்படாமல், ஆனால் ‘இந்தக் கொலையை எந்த தரப்பு செய்திருக்கக்கூடும்’ என்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் வண்ணமும், சில கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் எமது பொதுவான ஊகங்களை பொய்ப்பிக்கும் வகையிலும், பல ஆண்டுகளாய் இன்னமும் மர்மம் நீடிக்கும் கொலைகள் நிகழ்த்தப்பட்டும், பலர் காணாமலும் போயுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போனவர்கள் சிலருக்கு அவ்வப்போது நினவாஞ்சலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் நினைவு கூரப்படுவது இல்லை. இதனால் எமது நினைவுகளிலிருந்து மறைந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மரணித்தவர்களுக்கும் காணாமல் போயுள்ளவர்களுக்கும் பொறுப்புக்கூறவும் இன்று எவருமே இல்லை.

ஆரம்பகாலத்தில் புளொட் இயக்கத்திலிருந்து, பின்னர் தமிழ் – ஆங்கில பத்தி ஊடகவியலாளராக உருவெடுத்து, இறுதியில் புலிகளின் முகாமுக்குள் சரணடைந்த தர்மரத்தினம் சிவராம் கொலை செய்யப்பட்டு பத்தாவது ஆண்டினை நினைவுகூரும் கூட்டங்கள் மட்டக்களப்பிலும் சென்னையிலும் நடைபெற்றதுடன், சில தமிழ்த்தேசிய மற்றும் புலிகள் சார்பு ஊடகங்களும் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டு இருந்தன. சிவராம் கடந்துவந்த பாதையை முழுமையாக சொல்லப்படாது, அவர் ஒரு ‘சிறந்த’ தமிழ் – ஆங்கில பத்தி ஊடகவியலாளராக அல்லது புத்திஜீவியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.

1983-1987 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் புளொட்டின் ஆயுதப்பயிற்சி முகாம்களில் சில வதைமுகாம்களாக உருமாறி சித்திரவதைகளும் கொலைகளும் நடந்தேறிய போது, சிவராம் அந்த இயக்கத்தின் முன்னணி நபராக இருந்தவர். இவர் ஒருபோதும் புளொட்டினுள் நிகழ்ந்த அராஜகங்களை எதிர்;த்துப் போராடியவரல்ல. மாறாக, புளொட்டின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களோடே, புளொட் இயக்கம் சிதையும் வரைக்கும் தன்னை வலுவாக இணைத்து இருந்தவர். புளொட்டின் ஜனநாயக மீறல்களை அம்பலப்படுத்தி ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த பின்னரும், புளொட்டின் தலைவர்களில் ஒருவரான சந்தியார் புளொட் இயக்கத்தால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும் அந்த இயக்கத்தை விசுவாசித்தவர். மேலும் புளொட் இயக்க உறுப்பினர்களான அகிலன், செல்வன் ஆகியோரைக் கடத்தி மூதூரில் கொன்று புதைப்பதற்கு நேரடியாக இவர் துணைபுரிந்தவர்.

புலிகளுக்கும் புளொட்டிற்கும் தாயாதிப்பகை. இதனால் 1982இல் புளொட்டின் ஸ்தாபகரில் ஒருவரான சுந்தரம் புலிகளினால் கொல்லப்பட்டார். பின்னர் 1986இல் புளொட் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புளொட் உறுப்பினர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு எல்லா தமிழ் ஆயுத இயக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து புலிகள் ஒரு பெரும் பாசிச இயக்கமாக விருட்சம் பெற்ற பின்னரே, புலிகளுக்குள் சிவராம் பிரவேசித்தார்.

2004 இல் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது கருணாவின் ஆலோசகர் வடிவத்தில் சிவராம் மட்டக்களப்பில் நின்றார். ஆனால் கருணா பிரிந்து ஒரு வாரத்தின் பின்னர் வன்னியில் கால் பதித்த சிவராம், அங்கிருந்து கருணாவின் பிளவை எதிர்த்து அறிக்கைவிட்டார். இதுதான் அவரது குத்துக்கரணத்திற்கு மேல் குத்துக்கரணம் அடிக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணம்.. இவரது இந்த துரோகச் செயலுக்காக கருணா அணியினரே சிவராமை சுட்டுக்கொன்றதாக பல ஊடகவியலாளர்கள் பத்தி பத்தியாக எழுதினார்கள்.

தமிழ் தேசிய விடுதலைப் போரட்ட காலத்தில் இயக்கங்களினுள்; இழைக்கப்பட்ட, இயக்கங்களிடையேயான மோதல்களில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்கள் யுத்தக்குற்றங்களே. சிவராம் போன்ற மோசமான யுத்தக்குற்றவாளியை ஏதோ சில சக்திகள் நினைவுகூர திட்டமிட்டு செயற்படுகின்றன. ஆனால் தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்போன பல்லின மக்கள், போராளிகள், பத்திரிகையாளர்கள், அரச பணியாளர்கள், சமூக சேவையாளர்கள் கல்விமான்கள், அனைவரின் நினைவாஞ்சலிகளை ஒவ்வொன்றாக அனுஸ்டிக்காவிடினும், அவர்களை நினைவில் வைத்திருப்பதற்கு இன்று மிகச் சொற்பமானோரே எஞ்சியிருக்கின்றனர்.

நன்றி: ஆசிரியர் தலையங்கம் – வானவில் இதழ் 53
https://manikkural.wordpress.com/

மீண்டும் அதே பழைய பல்லவி!


செல்வரட்னம் சிறிதரன்

தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் ஓர் அரசியல் அமைப்பின் கீழ், ஒரே அரசியல் தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருக்கின்றார்கள் என்பதை காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. வரப்போகின்ற பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த வேண்டுகோள்கள், தமிழ் மக்களை நோக்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. Continue reading

%d bloggers like this: